‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று பள்ளியில் படித்தது பசுமரத்தாணி போல் நினைவில்நிலைத்து நிற்கிறது. தெளிவான கருத்து. மரபு அணுவிலிருந்து சுற்றுப்புற சூழல் வரை, பல காரணிகளால், நமது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. வைத்தியரிடம் போவதற்கு முன்னால், நோய் நம்மை அண்டவிடாமல் தடுத்தாட்கொள்வது சாலவும் நன்று. அத்தகைய ‘வருமுன் காப்போன்’ செயல்பாடுகளுக்கு, விழிப்புணர்வு பெரிதும் உதவும். இந்த சிறிய கட்டுரை புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு, தடுப்பு முறைகள், சிகிச்சை, தொடர் சிகிச்சை, வாழ்வியல் உத்திகள், அனுபவம் மற்றும் சமுதாய கோட்பாடு ஆகியவைபற்றி மட்டும் ஒரு அறிமுகம் தருகிறது.
விழிப்புணர்வு:
தொட்டதெல்லாம் ஒட்டிக்கொள்வதில்லை. புற்றுநோய் தொத்துவியாதி அல்ல. அதற்கு நிவாரணமே இல்லை என்று நிலவும் கருத்தும் தவறு. எதிர்பாராத வகையில், அதனுடைய தாக்கம் ஏற்படலாம் என்பதையும் மறுக்க இயலாது. இந்த கட்டுரையின் அடித்தளம்: அனுபவம், தன்னார்வப்பணி, ஆய்வு தளங்கள்.
சில புற்றுநோய் எச்சரிக்கைகள் யாவருக்கும் புரியும்; பெரிதும் உதவும். அவரவர்கள் கவனித்துக்கொள்ள இயலும். அவற்றை பற்றிய விழிப்புணர்வு இன்றியமையாதது. அவையாவன:
- ஓயாத இருமல்/ கம்மிய குரல்;
- நீண்டகாலமாக ஆறாத புண்கள்;
- உடலில் இனம் புரியாத வீக்கம்/தடிப்பு/கட்டி
- புது மச்சம்/ இருக்கும் மச்சத்தில் மாற்றங்கள்;
- நெடுநாள் அஜீரணம்/ விழுங்குவதில் இன்னல்;
- மலம்/சிறுநீர் கழிப்பதில் புதிய இன்னல்கள்;
- உடல் எடையில் திடீர் மாற்றம்;
- அதிகப்படி உதிரப்போக்கு/கசிவு;
- வலி நிவாரணிகளுக்குக் கட்டுப்படாத வலி.
மருத்துவரை அணுக, இந்த எச்சரிக்கைகள் உதவும். குறிப்பு வைத்துக்கொள்வது நலம். மேலும், சில தகவல்கள் நம் யாவருக்கும் தெரிய வேண்டும். புற்றுநோய் என்பது ஒரே ஒரு வியாதி அல்ல. அதற்கு, வயது ஒரு பொருட்டல்ல. அதற்கு பல பரிமாணங்கள் உண்டு: உடலில் எந்த பாகத்திலும் ~ மூளையிலிருந்து உள்ளங்கால் வரை~பாதிப்பு ஏற்படலாம். காரணிகள் பல. சுருங்கச்சொல்லின், வாழ்நாள் முழுதும், நமது உடலில் கோடிக்கணக்கான கலங்கள் (cells) பிறந்தும், மறைந்த வண்ணமாக இருக்கின்றன. அதற்கு திறன் மிகுந்த இயற்கை கட்டுப்பாடு உண்டு. தவறி, அந்த செயல் தாறுமாறாக இயங்கி கலங்கள் விகாரமாக பிரிந்தால், புற்றுநோய் வரும் அபாயமும், விகாரம் விரைவில் தீவரமாவதும் கவலை தரும் விளைவுகள். மருத்துவரிடம் சென்று, தேவையான சோதனைகளை செய்து கொள்வது நலம். அதற்கு முன்னால், தடுப்பதை பற்றி ஒரு பார்வை.
தடுப்புமுறைகள்:
புற்றுநோய் மட்டுமல்ல, இருதயநோய், நுரையீரல் நோய், ரத்த அழுத்தம் போன்ற பற்பல நோய்களை தவிர்க்க, சில வாழ்வியல் நடைமுறைகள் என்றும் உதவும். அவை: புகையிலை விலக்குதல், உகந்த உடற்பயிற்சி, திட்டமிட்ட உணவு முறை. சமுதாயம் செய்யவேண்டிய ‘வருமுன் காப்போன்’, ஸ்க்ரீனிங் எனப்படும் புற்றுநோய் கண்டறிதல் சோதனை. சமுதாய ‘புற்றுநோய் சிகிச்சை அணுகுமுறையும், கோட்பாடும், செயல்முறைகளும்’ இன்றியமையாதவை. கட்டுரை முடிவில் அவற்றை பற்றி பேசப்படும்.
சிகிச்சை:
பரிசோதனைகளுக்கு, புற்றுநோய் சிகிச்சையில் முக்கியத்துவம் அதிகம். இரத்த சோதனைகளுக்கு முதலிடம். கலங்களின் ஆரோக்கியத்தை அறியவும், புற்றுநோய் அறிகுறிகளை தனிமைப்படுத்தி, இனம் காணவும், இவை தேவை. மேலும், சதை, தசை, எலும்பு போன்றவற்றை பரிசோதிக்க வேண்டியிருக்கலாம். கதிர் (எக்ஸ்ரே), வருடி (சீ.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ, பி.ஈ.டி. ஸ்கேன்), குழாய் மூலம் சிறுகுடல் போன்ற உள்ளுறுப்புகளை படம் பிடித்து சோதிப்பது (எண்டோஸ்கோபி) என்று பல வகை சோதனைகள் உண்டு, அவை எல்லாவற்றையும் அடிக்கடி செய்ய நேரிடும் என்ற அளவுக்கு மட்டும், அறிமுகம் இங்கே. அவற்றால் விளையும் வலி, இன்னல், செலவு எல்லாம் தவிர்க்கமுடியாதவை. சிகிச்சையே, பரிசோதனைகளை பொறுத்து அமைகிறது. என் செய்வது?
பொதுவாக சிகிச்சையின் நான்கு பிரிவுகளை அறிமுகப்படுத்தலாம்.
- அறுவை சிகிச்சை: விகாரமான கலங்கள் மேலும் பரவாமல் இருக்க, அந்தந்த உறுப்புகள் களையப்படவேண்டும்.
- கதிர் இயக்க சிகிச்சை, அதி முக்யமாக கோபால்ட் இயக்க சிகிச்சை: க்யீரி அம்மையாருக்கு நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். அவருடைய கண்டுபிடிப்பால், பிழைத்தவர்களின் எண்ணிக்கை, கணக்கில் அடங்கா. இந்த கதிர்களால் விகாரப்பட்டுப்போன கலங்களை, குறி வைத்து, சுட்டழித்து விடுகிறார்கள்.
- வேதி மருத்துவம்: பல வருடங்கள் சிகிச்சை அனுபவமும், இடை விடாத ஆய்வு முடிபுகளும் தான் வேதி மருத்துவத்திற்கு அடித்தளம். உதாரணமாக மார்பக புற்றுநோய் மருந்தாக மூன்று நச்சு மருந்துகளின் கலவை (melphalan, sodium metatroxide & 5FU) பயன்பட்டது. இம்மாதிரி பல கலவைகள் உண்டு. அவை யாவற்றிற்கும் தீவிரமான பக்கவிளைவுகள் உண்டு. மருத்துவர் அறிவுரையை அறவே கடைபிடிக்கவேண்டும் என்பது தான், முக்கிய அறிமுகம்.
இவை மூன்றும் கலந்தும், தனித்தும் அளிக்கப்படலாம். அடிக்கடி அவற்றின் முறை (protocol) மாற்றப்படலாம்.
- புற்றுநோய் திரும்பி வரக்கூடியது என்பதால், ஆண்/பெண்பாலாருக்கு இயல்பாகவே உள்ள ஹார்மோன் சுரப்பிகளின் திறனை சற்றே மாற்றியமைத்து, வருமுன் காப்போனாக இயங்கும் இந்த சிகிச்சை முறை, மருத்துவ ஆலோசனையை பொறுத்து, உதவும்.
தொடர் சிகிச்சை:
கலங்களின் விகாரம் தான் புற்றுநோயின் அடிப்படைக்காரணம் என்பதால், அந்த நோயை அறவே ஒழித்ததாக என்றுமே சொல்ல இயலாது. தொடர் சிகிச்சை ஒன்று தான் வழி. ஒரு காலகட்டத்திற்கு, வாழ்நாள் முழுதும், வருடம் ஒரு முறை தவறாமல் மருத்துவப்பரிசோதனை செய்து கொள்வது விவேகம்.
வாழ்வியல் உத்திகள்:
அச்சம் தவிர். கவலையற்க. பணிகளை தொடருக. மற்றவருடன் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டு, விழிப்புணர்வு அளிப்பது, நமக்கே டானிக் கொடுத்த மாதிரி. உடற்பயிற்சி, ஆகார நியமங்கள், அன்றாட வாழ்க்கையில் ஆர்வம், தியானம் ஆகியவை உதவும். புற்றுநோய் நண்பர்கள் என்று குழுக்கள் ஆக்கப்பூர்வமாக இயங்குகின்றன.
அனுபவம் பேசுவது:
ஒரு மார்பக புற்று நோயாளி முற்றும் குணமடைந்தார். அறிகுறி ஐயம் ஏற்பட்டவுடனே சிகிச்சையும், முப்பது வருட தொடர் சிகிச்சையும் உதவியது. காலபோக்கில் பல முன்னேற்றங்கள். தற்செயலாக, தாடையில் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டவர் ஒருவருக்கு, வேதி மருத்துவம் உடனுக்குடன் கை கொடுத்தது. ஒரு நோயாளி மிகவும் கவலைக்குட்படுத்தப்பட்டார், ஒரு பணத்தாசை பிடித்த மருத்துவரால். ஒரு பிரபல புற்றுநோய் தர்ம ஆஸ்பத்திரி, அவருக்கு புற்று நோய் இல்லை என்று நிரூபித்து விட்டது! மருத்துவரை தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது!
சமுதாய புற்றுநோய் சிகிச்சை அணுகுமுறையும், கோட்பாடும், செயல்முறைகளும்:
புற்றுநோய் உயிர் பறிக்கும் வலிமை உடையது. தனிமனிதர்களால் தாக்குப்பிடிப்பது கடினம். செலவு அபரிமிதம். எனவே, சமுதாயமும், அரசும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இதன் கொடுமையை தணிக்கவேண்டும். வள்ளல்களின் நன்கொடை பெரிதும் உதவும். காப்பீடு திட்டங்கள் அவசியம் வேண்டும். அரசு பெரிய அளவில் மேற்பார்வை செய்வதுடன், ஸ்க்ரீனிங்க் திட்டங்களை, தேவையை பொறுத்து, செயல் படுத்தவேண்டும். பெண்பாலாருக்கு மார்பக ஸ்க்ரீனிங்க் நன்மை தரும். அந்த அளவுக்கு, வயது முதிர்ந்த ஆண்களுக்கு சிறுநீர் தடை ஸ்க்ரீனிங்க் தேவை இல்லை என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஆய்வுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மருந்துகளின் விலையை குறைக்க திட்டமிட முடியும்..
சுட்டிகள், ஆதாரங்கள் விவரம்:
இந்த கட்டுரையின் ஆதாரம், சுய அனுபவமும். கீழே சுட்டியுள்ள இரு இணைய தளங்களும். அதற்கெல்லாம் மேலாக, 28 01 2012 அன்று, மாக்மில்லன் என்ற புற்றுநோய் விழிப்புணர்வு மையத்தின் சுவரொட்டி பிரசாரத்தில் ஈடுபட்ட தன்னார்வ படிப்பினைகள்.
உசாத்துணை:
குறிப்பு : இந்தக்கட்டுரை திரு.இன்னம்பூரான் (எஸ்.ஸெளந்தரராஜன்) அவர்களுடையது. அவருக்கு தனியாக வலைப்பூ இல்லாததால் இங்கு வெளியிடப்படுகிறது.
கட்டுரைப் போட்டியில் பரிசினை வென்ற தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
ReplyDeleteபோட்டியில் வென்ற தங்களுக்கு என் மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
ReplyDelete